புகையிலைப் பொருட்களை கடத்தி சென்ற குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண் டா சுங்க சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிகாலை 2 மணிக்கு வேலூர் நோக்கி சென்ற ஒரு லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் 50-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் மூட்டைகளில் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை லாரியில் கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து லாரியில் வந்தவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் மற்றும் ரமேஷ் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் புகையிலை பொருட்களை சென்னைக்கு கடத்தி சென்றுள்ளனர். இதனை அடுத்து ராஜேஷ் மற்றும் ரமேஷ் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.