தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 – 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அதுமட்டுமல்லாமல் முதல்வர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் வருகின்ற அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பின்படி வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே இனி பள்ளிகள் செயல்படும். இருந்தாலும் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது. சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதால் மாணவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.