சென்னையில் பைக்ரேஸ் கலாசாரம் அதிகரித்துள்ளது. பொதுவாக புத்தாண்டு தினம் உள்ளிட்ட நாட்களில் பொதுயிடங்களில் நடைபெறும் பைக்ரேஸ் இப்போது தினசரி நடந்து வருகிறது. இளைஞர்கள் அதிவேகமாக செல்வதாலும், சாலை விதிகளை மதிக்காததாலும் இந்த ரேஸால் பல்வேறு விபத்துக்கள், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அந்த அடிப்படையில் தாம்பரம்அருகில் வண்டலூர் பகுதியில் இளைஞர்கள் ரேஸ்சென்ற காரணத்தால் பெண் ஒருவர் இறந்திருக்கிறார். இதில் தாம்பரம் வெளிவட்ட சாலையில் 2 இருசக்கர வாகனத்தில் சென்ற 55 வயது மதிக்கத்தக்க பெண் மீது அதே சாலையில் வேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் நிலை தடுமாறி தடுப்புச் சுவரில் மோதி பலத்த காயத்தால் பெண் இறந்தார்.
அதாவது மூன்று வண்டிகளில் 5 இளைஞர்கள் பைக்ரேஸில் ஈடுப்பட்டதாகவும், அப்போது பெண் மீது இளைஞர் மோதியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த பெண்ணை மோதிய இளைஞர் கீழேவிழுந்ததில் அவருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் முடிச்சூரில் வசித்து வரும் விஸ்வா (25) என்பது தெரியவந்திருக்கிறது. இதனிடையில் ரேஸில் ஈடுபட்ட மற்ற இளைஞர்கள் அடிபட்டு இறந்த பெண் மற்றும் கால் முறிவு ஏற்பட்ட நண்பரை கண்டுகொள்ளாமல் தப்பிச்சென்றதாக தெரிகிறது. அதன்பின் அவ்வழியே சென்ற நபர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததன்படி ஓட்டேரி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதேபோன்று காயமடைந்துள்ள இளைஞரை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதனைதொடர்ந்து சிட்லபாக்கம் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் தப்பிச்சென்ற மற்ற இருவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இறந்த அப்பெண்ணின் கை பையை சோதனையிட்டபோது போலீஸ் கேண்டீன்கார்டு ஒன்று இருந்துள்ளது. அதில் காவல் ஆய்வாளர் செல்வகுமாரி என்று பெயர் இருந்தது. ஆகவே விபத்தில் இறந்தது காவல் ஆய்வாளர் செல்வகுமாரியா (அல்லது) வேறு யாருமா என்பது தொடர்பாக விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.