பந்தய மோட்டார் சைக்கிள் மோதி ஓய்வு பெற்ற பெண் இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் ஓய்வு பெற்ற பெண் இன்ஸ்பெக்டரான செல்வகுமாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வகுமாரி மொபட்டில் வண்டலூர்-மீஞ்சூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒரு பந்தய மோட்டார் சைக்கிள் செல்வகுமாரி மொபட்டின் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த செல்வகுமாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் பந்தய மோட்டார் சைக்கிளில் வந்த விஷ்வா என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் விஷ்வாவை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட மற்ற 2 வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வகுமாரியின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குரோம்பேட்டை காவல்துறையினர் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 2 பேரை தேடி வருகின்றனர்.