மதுரையில் இருந்து துபாய்க்கு விமான சேவை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் மதுரையில் இருந்து துபாய் செல்வதற்க்காக தனியார் விமானம் ஒன்று தயாராக இருந்தது. அதில் பயணம் செய்வதற்காக 150 பயணிகள் முன்பதிவு செய்து விமான நிலைய வளாகத்தில் காத்துக்கொண்டிருந்தனர். அதன்பின் அவர்கள் பல்வேறு கட்ட பரிசோதனைக்கு பின்னர் விமானத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பயணிகள் அனைவரும் வாகனத்தில் ஏறி அமர்ந்த பின் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் உடனடியாக கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓடு தளப்பகுதியில் காத்திருந்தனர். நீண்ட நேரமாகியும் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்படாத காரணத்தினால் பயணிகள் விமான நிலைய பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் பின் அவர்கள் அனைவரும் மீண்டும் விமான நிலைய வளாகத்திற்குள் அழைத்துவரப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்வதற்கு சென்னையிலிருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு சரி செய்யும் பணிகள் நடைபெற்றது. மாலை 6 மணி வரை அந்த விமானம் துபாய் செல்லாமல் மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதில் நீண்ட நேரம் தாமதமானதால் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.