இலங்கையில் எரிபொருளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் கடைசியாக வரும் எரிபொருள் கப்பலுக்காக மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது அங்கு உணவு பொருட்கள், எரிவாயு மற்றும் மருந்து பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. எனவே, கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து எரிபொருள் நிரப்பக்கூடிய நிலையங்களில் வெகு நேரமாக மக்கள் நீளமான வரிசையில் காத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து எரிசக்தி மந்திரியான காஞ்சனா விஜேசேகர தெரிவித்ததாவது, இந்தியாவின் கடனுதவி திட்டப்படி இறுதி டீசல் கப்பலானது வரும் 16ஆம் தேதி வருகிறது. மேலும், பெட்ரோல் கப்பல் 22ஆம் தேதி வந்து சேரும் என்று கூறியிருக்கிறார். எனவே, அந்த இரண்டு கப்பல்களை எதிர்நோக்கி மக்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.
அந்நாட்டில் நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 ஆயிரம் டன்கள் டீசல் தேவைப்படுகிறது. எனினும் முன்னுரிமைப்படி கடந்த வாரத்தில் 3000 டன்கள் தான் வினியோகம் செய்யப்பட்டது என்று கூறியிருக்கிறார். இதேபோல நாள் ஒன்றிற்கான பெட்ரோல் தேவையானது 3500 டன்னாக இருக்கிறது. எனினும் 3200 டன்கள் தான் விநியோகம் செய்யப்படுவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.