உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தில் சுகாதாரமான குடிநீர் இல்லாததால் மக்களுக்கு காலரா பரவக்கூடிய அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில், ரஷ்யா 100 நாட்களை கடந்து தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் மரியுபோல் என்னும் துறைமுக நகரம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அங்கு சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். அந்த மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை.
எனவே, அங்கு காலரா நோய் பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது, ரஷ்யப் படைகள் கைப்பற்றியிருக்கும் மரியுபோல் நகரத்தில் இருக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட கிடைப்பதில்லை. சுகாதாரமான குடிநீரும் இல்லை.
தொலைபேசி சேவைகளில் அதிக இடையூறு இருக்கிறது. அந்நாட்டில் கடந்த 1995 ஆம் வருடத்தில் காலரா நோயால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த மாதத்திலிருந்து அங்கு காலரா பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அது மேலும் அதிகமாகக்கூடிய அபாயம் இருக்கிறது என்று கூறியுள்ளது.