இந்தியாவில் அடுத்த ஆறு மாதங்களில் பல நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் 86 சதவீதம் பேர் வேலையை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. விலைவாசியும் தாறுமாறாக உயர்ந்ததால் மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொரோனா தொற்று காரணமாக பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் அடுத்த 6 மாதத்தில் 86 சதவீத இந்தியர்கள் தங்களது வேலையை ராஜினாமா செய்ய உள்ளதாக ஒரு ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த மைக்கேல் பேஜ் என்ற நிறுவனம் 12 நாடுகளில் கணக்கெடுப்பு நடத்தியது. இதில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. இந்திய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் 86 சதவீதம் பேர் பணி நிம்மதி இல்லாமை, மகிழ்ச்சியின்மை உள்ளிட்ட காரணங்களால் பணியை ராஜினாமா செய்வார்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும் 60% ஊழியர்கள் தற்போது வழங்கும் ஊதியத்தை விட குறைவாக இருந்தாலும் வேறு வேலைக்கு செல்ல தயாராக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.