நெல்லையில் சொத்து வரியில் பெயர் மாற்றுவதற்காக ரூபாய் 1000 லஞ்சம் கேட்ட நகராட்சி ஊழியருக்கு 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஓராண்டு சிறை தண்டனை கிடைத்துள்ளது.
தென்காசி பகுதியில் வசித்து வருபவர் முத்துச்சாமி. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு தனது தந்தையின் சொத்து வரியில் தனது பெயரை மாற்றக்கோரி கடையநல்லூர் நகராட்சியில் பில் கலெக்டர் முருகேசன் என்பவரிடம் மனு கொடுத்து உள்ளார். ஆனால் பணியை மிகவும் தாமதமாக செய்த முருகேசனை நேரில் பலமுறை சந்தித்து முறையிட்டுள்ளார் முத்துச்சாமி.
இதையடுத்து ரூபாய் 1000 லஞ்சம் கொடுத்தால் உடனடியாக பணியை முடித்து தருவதாக அவர் கூறியதை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார் முத்துச்சாமி. இதையடுத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை காவல்துறை மற்றும் லஞ்ச துறை அதிகாரிகளின் உதவியுடன் முருகேசனிடம் கொடுத்ததையடுத்து கையும் களவுமாக அதிகாரிகள் நகராட்சி ஊழியரை கைது செய்தனர்.
பின் இந்த வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் தலைமையில் சுமார் ஒன்பது ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. இது தொடர்பாக 13 ஆவணங்களை சேகரித்த அதிகாரிகள் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் அதனை சமர்ப்பித்த நிலையில் நெல்லை நீதிமன்றம் நகராட்சி ஊழியரான முருகேசனுக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.