பெண் தனது 2 வயது குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்திலுள்ள கூடக்கோவில் பகுதியில் மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மகள் உள்ளார். கடந்த 20019-ஆம் ஆண்டு ஜோதிக்கு கார்த்திக் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கர்ப்பமாக இருந்த ஜோதியை அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர். மறுநாள் ஜோதி கார்த்திக்கை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போது அழைப்பை எடுத்த கார்த்தியின் தாயார் நீ எதற்காக போன் செய்கிறாய் என கூறி அழைப்பை துண்டித்தார்.
இதனை அடுத்து மீண்டும் அழைத்த போது கார்த்திக் பேசியுள்ளார். அப்போது எனது சகோதரிக்கு 50 பவுன் தங்க நகையை வரதட்சணையாக கொடுத்துள்ளோம். ஆனால் உங்கள் வீட்டில் 25 பவுன் தங்க நகையை கொடுத்துள்ளீர்கள், அதுவும் போலியானது என கூறி கார்த்திக் அழைப்பை துண்டித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஜோதி தனது கணவரின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு சகோதரியின் வீட்டிற்கு சென்றது தெரியவந்துள்ளது.
இது குறித்து ஜோதி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் கணவருடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி பெருங்குடியில் இருக்கும் கார்த்தியின் சகோதரி வீட்டின் முன்பு ஜோதி தனது 2 வயது குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜோதி மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.