மாற்றுத்திறனாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு வந்த மாற்றுத்திறனாளி ஒருவர் உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்த நபர் மீது தண்ணீரை ஊற்றினர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் மேட்டுப்பாளையம் ஸ்ரீ சிங்கராய ஓடையில் வசிக்கும் முகமது சாதிக் இப்ராஹிம்(34) என்பது தெரியவந்துள்ளது.
இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் முகமது சாதிக் மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலையில் இருக்கும் வாடகை கட்டிடத்தில் அலுவலகம் அமைத்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். அந்த அலுவலகத்தை காலி செய்ய வலியுறுத்தி சிலர் முகமதுவை மிரட்டுகின்றனர். மேலும் நள்ளிரவு நேரத்தில் அலுவலக பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து புகார் அளித்தும் காவல்துறையினர் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முகமது தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து முகமது வழங்கிய மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சமீரன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.