Categories
மாநில செய்திகள்

5 ஆண்டுகளாக…. 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை…. தனியார் மருத்துவமனைகளில் கிடுக்குப்பிடி விசாரணை….!!!

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் தாய் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து பெயிண்டர் ஒருவரை‌ 2-வதாக திருமணம் செய்து தனியாக வசித்து வந்தார். அந்த சிறுமியின் தாய் கருமுட்டையை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இவருக்கு மாலதி என்ற ஒரு பெண் புரோக்கருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர் அந்தப் பெண்ணிடம் உங்கள் மகளின் மூலம் கருமுட்டையை விற்பனை செய்தால் ஏராளமான பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதனால் சிறுமியின் தாயார் வளர்ப்பு தந்தையான பெயிண்டரிடம் தன்னுடைய சொந்த மகளையே பாலியல் பலாத்காரம் செய்யுமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து வளர்ப்புத் தந்தையும் சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். அதன்பிறகு சிறுமியின் கருமுட்டைகளை தனியார் மருத்துவமனைகளில் விற்பனை செய்து வந்துள்ளனர். இந்த கருமுட்டையை விற்பனை செய்வதற்காக சிறுமியின் வயதை அதிகரித்து காட்ட வேண்டும் என்ற நோக்கத்திற்காக போலியான ஆதார் அட்டையை தயார் செய்துள்ளனர். இந்த போலி ஆதார் அட்டையை ஜான் என்பவர் தயாரித்துக் கொடுத்துள்ளார். இந்த போலி ஆதார் அட்டையை காண்பித்து ஈரோடு, சேலம் மற்றும் ஓசூர் உட்பட பல பகுதிகளில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளில் கருமுட்டைகளை விற்பனை செய்துள்ளனர்.

இந்த கருமுட்டைகளை வாங்கிக்கொள்ளும் மருத்துவமனைகள் சிறுமியின் தாயாருக்கு ரூபாய் 20 ஆயிரமும், புரோக்கர் மாலதிக்கு 5,000 ரூபாயும் கொடுத்துள்ளனர். இப்படி சிறுமியிடம் இருந்து 8 முறை கரு முட்டைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கருமுட்டை விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு சிறுமியின் தாய் மற்றும் தந்தை 2 பேரும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமிக்கு வளர்ப்புத் தந்தை தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுக்கவே, சிறுமி அங்கிருந்து தப்பித்து சேலத்தில் உள்ள ஒரு உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். அவர்களிடம் சிறுமி நடந்ததை கூறவே, ஈரோடு சூரம்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் தாய், வளர்ப்புத் தந்தை, ஜான், மாலதி உள்பட 4 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிறுமியின் கருமுட்டையை வாங்கிய தனியார் மருத்துவமனைகளின் மீது விசாரணை நடத்துவதற்காக சென்னையில் உள்ள மருத்துவ பணிகள் இயக்குனரகத்திலிருந்து 6 பேர் கொண்ட குழு ஈரோடு, சேலம் மற்றும் ஓசூர் ஆகிய பகுதிகளுக்கு விரைந்துள்ளது. இவர்கள் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு, அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

அந்த விசாரணையில் சிறுமி தன்னுடைய தாய் மற்றும் வளர்ப்பு தந்தை ஆகிய 2 பேரும் உல்லாசமாக வாழ்வதற்காக, என்னை வளர்ப்பு தந்தை பாலியல் பலாத்காரம் செய்து சுமார் 5 ஆண்டுகளாக என்னுடைய கருமுட்டையை சேலம், ஈரோடு, ஓசூர், கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளில் விற்பனை செய்தனர் என்று கூறியுள்ளார். இதனையடுத்து மருத்துவ குழு சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் விசாரணை நடத்தி வருவதோடு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் மருத்துவமனைகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. இந்த விசாரணைகள் அனைத்தும் முழுமையாக முடிவடைந்த பிறகு சிறுமிக்கு பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |