இலங்கை நாட்டில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையில் புது பிரதமராக ரணில் விக்கிரம சிங்கே பதவி ஏற்ற பின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். எனினும் அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிற அந்நாட்டில், இந்த சூழலுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பம்தான் காரணம் என்றுகூறி அவர்கள் பதவி விலகக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நெருக்கடி முற்றிய சூழ்நிலையில் மகிந்தராஜபக்சே பதவி விலகினார். இந்நிலையில் தோல்வியடைந்த அதிபராக தன்னால் பதவியை விட்டு வெளியேற முடியாது என்று அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகள் ஆட்சிசெய்ய மக்கள் தனக்கு ஆணை வழங்கியிருப்பதாகவும், எஞ்சியுள்ள 2 வருட காலத்தையும் ஆட்சி செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறைந்தது ஒரு வருடத்திற்கு முன்பாக சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று இருந்தால் இந்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது என்று கூறிய அதிபர் நெருக்கடியை சமாளிக்க இந்தியா, சீனா நாடுகளிடம் உதவியை நாடியுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.