தெலுங்கானா மாநிலத்தில் காதல் மனைவியை துண்டு துண்டாக வெட்டி கணவர் பேரலில் அடைத்து வைத்து விட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் மகபூப் நகர் பகுதியில் வசித்து வரும் அனில்குமார் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சரோஜா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதையடுத்து ஹைதராபாத்தில் அவர் குடித்தனம் நடத்தி வந்தார். திருமணமான சில மாதங்களில் இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை ஏற்பட்டுள்ளது. அதனால் சரோஜா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அதன் பிறகு பெற்றோர் சரோஜாவை சமாதானப்படுத்தி கணவர் வீட்டிற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சரோஜாவின் பெற்றோர் வழக்கம் போல போன் செய்தனர். அப்போது சரோஜாவின் போன் ஸ்விட்ச் ஆஃப் என வந்துள்ளது. அதனால் சந்தேகம் அடைந்த சரோஜாவின் பெற்றோர் உடனே வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது வீடு பூட்டி இருந்ததால் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து போலீசார் வீட்டிற்கு வந்து பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தண்ணீர் டிரம்மில் சரோஜா உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அனில்குமார் ஏற்கனவே தனக்கு திருமணமானதை மறைத்து சரோஜாவை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.
இது சரோஜாவுக்கு தெரியவந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டதால் உடற்பயிற்சி செய்யும் கருவியால் சரோஜாவை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காதல் மனைவியை உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்த அவர் கொலையை மறைப்பதற்காக உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டிலுள்ள டிரம்மில் அடைத்து வைத்துள்ளார்.
அதனை புதரில் வீச திட்டமிட்டிருந்த நிலையில், மாட்டிக் கொள்ளக்கூடாது என்றுவீட்டைப் பூட்டிவிட்டுஅனில் குமார் தலைமறைவாகி விட்டார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.