Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தற்கொலை செய்து கொண்ட மனைவி…. கணவருக்கு கத்திக்குத்து…. மைத்துனர் உள்பட 3 பேர் கைது…!!

அக்காள் கணவரை கத்தியால் குத்திய மைத்துனர் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள பெரியகற்பூரம்பட்டியில் கொத்தனாரான செல்வமணி(45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காத்தம்மா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு செல்வமணி மீனாட்சி(30) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதில் மீனாட்சிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது செல்வமணி தனது 2 மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் காத்தம்மா மற்றும் மீனாட்சி ஆகிய இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் காத்தம்மா வயலில் இருக்கும் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மீனாட்சி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த மீனாட்சியின் தம்பி வடிவேல், உறவினர்கள் செல்லப்பா, சோனையன் ஆகியோர் செல்வமணியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வடிவேல் செல்வமணியை கத்தியால் சரமாரியாக குத்தியதால் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக செல்வமணியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே காவல்துறையினர் மீனாட்சியின் உடலை கைப்பற்றி மேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வடிவேல், செல்லப்பா, சோனையன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |