தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தற்போது இறுதித்தேர்வு முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தக்க வைத்துக் கொள்ள அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
அதன்படி சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருடத்தைப் போல இந்த வருடமும் அதிக அளவு மாணவர்களை சேர்த்த மாநகராட்சி கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து, ஏழை குழந்தைகள் காலை உணவு அருந்தாமல் பள்ளிக்கு வருவதால் சோர்வடைவதை கருத்தில் கொண்டு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட உடன் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடுகளை செய்து வருகிறது.
அதன்படி சென்னை மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி அம்மா உணவகம் மூலமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் குழந்தைகளுக்கு தரமான உணவாக என்ன வழங்கலாம் என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அம்மா உணவகங்களில் இருந்தே விற்பனை குறைந்து வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகின்ற நிலையில் அதனை மேம்படுத்தும் நோக்கத்தில் காலை சிற்றுண்டியை அங்கிருந்து குழந்தைகளுக்கு வழங்கிட ஏற்பாடு நடந்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.