பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் டிராக்டர் டிரைவர் இரும்பு குழாயால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி கௌரி பேட்டை கடம்பை தெருவைச் சேர்ந்த மோகன் குமார் என்ற மனோஜ். இவர் ஆவடி புது நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த பிரபு என்பவரின் தண்ணீர் லாரியில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இருவரும் சேர்ந்து ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்து வந்தனர். மோகன்குமார் கடந்த 6 மாதங்களுக்கு முன் பிரபுவிடம் பத்தாயிரம் ரூபாய் கடனாக வாங்கியதாக தெரிகின்றது. அதன்பின் பிரபு பலமுறை கடனை திருப்பி கேட்கும் போது பணத்தை கொடுக்காமல் மோகன்குமார் காலம் தாழ்த்தி வந்திருக்கின்றார்.
இது தொடர்பாக கடந்த மூன்று நாட்களுக்கு முன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை மோகன்குமார் டிராக்டரில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்காக ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த பிரபு அவரது நண்பர்களான ஆவடி காமராஜர் நகர் பாரதி தெருவைச் சேர்ந்த கார் டிரைவர் சதீஷ்(32), பட்டாபிராம் காந்தி நகர் 3-வது தெருவை சேர்ந்த தனியார் கேபிள் டி.வி. அலுவலக ஊழியரான பிரான்சிஸ் என்ற கலையரசன் (24) ஆகியோர் மோகன்குமாரை வழிமறித்து பெரிய இரும்பு குழாயால் அவரது தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் மண்டை உடைந்ததால் படுகாயமடைந்த மோகன்குமார் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பின்பு பிரபு,சதீஷ், பிரான்சிஸ், ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த ஆவடி போலீசார் கொலையான மோகன்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு, சதீஷ், பிரான்சிஸ் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.