தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் முடிவடைந்ததையடுத்து 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் தேர்வு நடத்தப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கும் என்றும் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுக்கும்படி மத்திய சுகாதாரத்துறை தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. எனவே கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா என்ற கேள்வியும் எழுகிறது. வரும் 13ம் தேதி பள்ளிகள் திறக்க கல்வித்துறை திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது பாதிப்பு அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் மட்டும் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம் என்றும் கூறப்படுகிறது.