சென்னையில் இருந்து நேற்று தூத்துக்குடி புறப்பட்ட முத்துநகர் விரைவு ரயிலில் 5 காவலர்கள் உள்ளிட்ட 7 பேர் பயணித்துள்ளனர். இவர்கள் தாம்பரத்திலிருந்து பிற பயணிகளிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து டிக்கெட் பரிசோதகர் விருதாச்சலம் ரயில்வே போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலின் பேரில் விருதாச்சலம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் 3 போலீசார் உள்ளிட்ட 5 பேரை கீழே இறங்கி விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், மாணிக்கராஜ், செந்தில்குமார், முருகன் அகிய மூவரும் சென்னையில் காவலராக பணியாற்றி வருகிறார்கள் என்றும், இவர்கள் குடிபோதையில் ரயிலில் பயணம் மேற்கொண்டு உள்ளார் என்பதும் தெரியவந்தது. இதனால் அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட காவலர்களுக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் காவல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.