திருமணமாகி 6 மாத ஆன நிலையில் கணவன், மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையை சேர்ந்த 22 வயதுடைய சக்திவேல் என்பவர் சென்னை மதுரவாயல் அடுத்துள்ள ஆலப்பாக்கம் தனலட்சுமி நகர் பகுதியில் காயலான் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 20 வயதுடைய ஆர்த்தி என்ற பெண்ணுடன் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் இருவரும் மதுரவாயில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை இவருடைய உறவினர்கள் செல்போனில் அழைத்தபோது செல்போனை எடுக்க இல்லை. கடையும் திறக்க இல்லை. வீட்டின் கதவு வெகு நேரமாகியும் திறக்காமல் இருந்தது. இதை பார்த்து சந்தேகமடைந்த அருகிலிருந்தவர்கள் மதுரவாயல் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மதுரவாயில் காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கணவன், மனைவி இருவரும் தூக்கில் பிணமாக தொங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். இதனை அடுத்து இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.