ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் அந்த நாட்டு அரசு படைகளுக்கும் இடையில் 8 ஆண்டு காலமாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல லட்சம் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில் ஏமனில் சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்த ஐ.நா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் பலனாக இரண்டு மாதங்களுக்கு சண்டை நிறுத்தத்தை அமல்படுத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தரப்பும் அரசும் ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி முதல் அங்கு சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதனால் ஏமனில் கடந்த 2 மாதங்களாக தாக்குதலும் உயிரிழப்பும் கணிசமாக குறைந்துள்ளது.
தற்போது ஹீடைடா துறைமுகம் வழியாக எரிபொருள் விநியோகம் அதிகரித்துள்ளது. அதனை போல 6 வருடங்களுக்கு பிறகு தலைநகர் சனாவில் இருந்து வணிக ரீதியிலான விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்நிலையில் சண்டை நிறுத்தம் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று ஏமனுக்கான ஐநாவின் சிறப்பு தூதர் ஹான்ஸ் கிரண்ட் பெர்க் நேற்று முன்தினம் அறிவித்தார். அதாவது ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சண்டை நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஏமனில் சண்டை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை ஐநா பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வரவேற்றுள்ளார்.