Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி தேர்தல் : பாஜக நட்சத்திர பேச்சாளர்களுக்கு தடை ….!!

சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்களான அனுராக் தாகூர், பர்வேஷ் வெர்மா ஆகியோருக்கு பரப்புரையில் ஈடுபட தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 10ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் பல அரசியல் கட்சியினர் தேர்தல் பரப்புரையின்போது விதிகளை மீறுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

இந்நிலையில் இன்று பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்களான அனுராக் தாகூருக்கு 76 மணி நேரமும், பர்வேஷ் வெர்மாவுக்கு 96 மணி நேரமும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

முன்னதாக ஷாஹீன் பாக்கில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர், ”துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதேபோல் டெல்லி மேற்கு பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வெர்மா காஷ்மீர் பண்டிட்களுக்கு நிகழ்ந்தது டெல்லியிலும் நிகழலாம் எனவும் ஷாஹீன் பாக்கில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெண்களை வீடு புகுந்து கொல்லவும் பாலியல் வன்புணர்விற்கு ஆளாக்கவும் வல்லவர்கள் எனவும் சர்ச்சைக்குரிய முறையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |