Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு…. மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படுமா….? அமைச்சர் பி.டி.ஆர் விளக்கம்….!!!

தமிழக நிதியமைச்சர் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் இருக்கும் பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது.

ஆனால் இதுவரை தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த எந்தவிதமான நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பழைய பென்ஷன் திட்டம் குறித்து தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பரவி வந்த தவறான கருத்துகளுக்கு பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.

கடந்த 2003-ம் ஆண்டு அ.தி.மு.க அரசால் அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதியலிருந்து இதுவரை 6.2 லட்சம் அரசு ஊழியர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இந்தத் திட்டத்தின்படி ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி 10 சதவீதமாக பணியாளர்களின் பங்கு தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு நிகரான தொகை அரசு சார்பில் பணியாளர்களின் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கான வட்டி தொகையையும் அரசு செலுத்தி வருகிறது.

இதனையடுத்து தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேருவதா, இல்லையா என்பது அரசின் முடிவாகும். இந்நிலையில் அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத்தின் வைப்பு தொகை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலும், பாரத ரிசர்வ் வங்கியின் மூலம் அரசின் கருவூல பட்டியல்களிலும் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நடைமுறைதான் கடந்த 2003-ம் ஆண்டில் இருந்தே பின்பற்றப்படுகிறது. அதன்பிறகு அரசு ஊழியர்களின் பங்களிப்பு தொகை 2022-ஆம் ஆண்டு மார்ச் மாத கணக்கெடுப்பின்படி 53,555.75 கோடியாக இருக்கிறது.

இந்தத் தொகையானது அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கு மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது. இந்த பணம் வேறு காரணங்களுக்கு செலவிடப்படவில்லை. இனிவரும் காலங்களிலும் ஓய்வூதியத்திற்கு மட்டுமே செலவிடப்படும். மேலும் பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் பங்களிப்பு தொகை குறித்த வதந்திகளை அரசு ஊழியர்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்

Categories

Tech |