மதுரை அருகே பத்திரிக்கையில் பெயர் போடாததால் வந்த தகராறில் பெண் ஒருவர் உயிரிழக்க மாப்பிளை கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் ஏழுமலை பகுதியை அடுத்த துள்ளகுட்டிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமர். அதே பகுதியில் வசித்து வருபவர் சின்னச்சாமி. இவர்கள் இருவரும் சொந்தக்காரராக இருந்தாலும், இரு குடும்பத்தினர் இடையே நீண்ட காலமாக இருக்கும் சண்டை காரணமாக பேசிக்கொள்வதில்லை. இந்நிலையில் ராமரின் மகன் சதீஷ்குமாருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அப்போது பெண் வீட்டார் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கும் சமயத்தில் சின்னச்சாமியின் பெயரை அதில் போடக்கூடாது என ராமர் வலியுறுத்தியுள்ளார். இதனால் சின்னசாமி குடும்பத்திற்கும் ராமர் குடும்பத்திற்கும் மோதல் முற்றியது. இதையடுத்து நேற்று சதீஷ் தனது வீட்டின் முன்பு நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சின்னசமி மற்றும் அவரது மனைவி அங்கம்மாள் அவரை ஜாடையாக திட்டினர்.
இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அது முற்றி தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் அங்கம்மாள் கீழே தள்ளப்பட்டு படுகாயமடைந்தார். அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கிச் சென்ற போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். பின் இதுகுறித்து சின்னசாமி காவல் நிலையத்தில் புகார் அளிக்க புகாரின் பேரில் மாப்பிள்ளை சதீஷ் மற்றும் அவரது தந்தை இராமர் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.