ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை குறைக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் ஏராளமானோர் கல்வி பயின்று வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படாத நிலையில் இந்த ஆண்டு அனைத்து மாணவர்களுக்கும் இறுதி தேர்வு நடத்தப்பட்டது. 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே மாதம் 13ஆம் தேதி இறுதி தேர்வு முடிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு மே மாதம் 14ஆம் தேதி முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை ஜூன் 5ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 6-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் எண்ணும் எழுத்தும் பயிற்சி தேர்வில் பங்கேற்கும் படி ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். கோடை விடுமுறை குறைக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.