இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த படகுகளை மீட்டு தரக்கோரி கர்ப்பிணிப் பெண்ணொருவர் முதல்வரிடம் மனு அளித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று நாகை மாவட்டத்திலுள்ள வேளாங்கண்ணி அருகே இருக்கும் கருவேலங்கடை பகுதியில் கல்லாறு வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை பார்வையிட்டார். அப்போது பொதுமக்கள் அவரை சந்தித்து மனுக்களை அளித்தனர். இதையடுத்து முதல்வர் காரில் புறப்பட்டு சென்ற போது கர்ப்பிணி ஒருவர் முதலமைச்சரை சந்திக்க முயன்றார். ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் கர்ப்பிணியை சந்திக்க விடவில்லை.
இதையடுத்து கர்ப்பிணி போலீசாரிடம் மண்டியிட்டு அழுததைப் பார்த்த முதல்வர் காரை நிறுத்திவிட்டு கர்ப்பிணியை கூப்பிட்டு பேசினார். அப்போது கர்ப்பிணி கூறியுள்ளதாவது, எனது பெயர் ஐஸ்வர்யா. நான் கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்தில் வசித்து வரும் நிலையில் சென்ற பிப்ரவரி மாதம் மீன்பிடிக்கச் சென்ற எனது கணவரின் விசைப்படகு உள்ளிட்ட 4 பேரின் விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். மீனவர்களை விடுவித்து இருந்தாலும் விசைப்படகுகளை அவர்கள் விடுவிக்கவில்லை. அந்த விசை படகு ரூபாய் 1 கோடி கடன் வாங்கி கட்டப்பட்டதாகும்.
விசைப்படகை கைப்பற்றியதால் எங்களது குழந்தைகளை எங்களால் படிக்க வைக்காத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. வரும் 16ம் தேதியுடன் மீன்பிடி தடை காலம் முடிவடைய இருக்கின்றது. ஆனால் நாங்கள் தொழிலுக்கு பயன்படுத்தக்கூடிய விசைப்படகு எங்களிடம் இல்லை. இதனால் விசைப்படகை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் நடவடிக்கை எடுப்பதாக கூறி விட்டு அங்கிருந்து சென்றார்.