தமிழகத்தில் தொற்று காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது புதிய அச்சத்தை ஏற்படுத்துகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தொற்று காரணமாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பல இடங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருவது சுகாதாரத் துறைக்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. தொற்று பரவலை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை முன்னெடுக்கும் படி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி தினசரி தொற்று பாதிப்பு 22 ஆக பதிவான நிலையில், தற்போது அது 100ஆக மாறி வருகிறது.புதிதாக தொற்றுக்கு உள்ளானோருக்கு பாதிப்பின் வீரியம் மிகக் குறைவாக இருப்பதற்கு ஒமைக்ரானின் புதிய வகை பரவலோ அல்லது நோய் எதிா்ப்பாற்றலால் தீவிரம் குறைந்த தீநுண்மி பரவியதோ காரணமாக இருக்கலாம். கல்வி நிறுவனங்கள் குடும்பங்களில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவாமல் இருக்க பாதிக்கப்பட்டவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும். அதை தவிர தடுப்பூசியை தவறாமல் பொதுமக்கள் போட்டுக்கொள்ள வேண்டும். அதேபோன்று பொது இடங்கள் கூட்டமான பகுதிகளில் முக கவசம் அணிவது உறுதி செய்வது மிகவும் முக்கியம்” என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.