மணலி விரைவு ரோட்டில் சிமெண்டு கலவை லாரி மோதிய விபத்தில் டிரைவர் படுகாயமடைந்துள்ளார்.
சென்னை மாதவரத்திலிருந்து சிமெண்ட் கலவை கலக்கும் லாரி ஒன்று திருவொற்றியூர் நோக்கி சென்றது. மேற்குவங்கத்தில் வசித்த சீத்தாராமன் (24) என்பவர் லாரியை ஓட்டினார். சாத்தாங்காடு போலீஸ் நிலையம் அருகே அதிவேகமாக சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் ஓட்டுநர் படுகாயமடைந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தாங்காடு காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஓட்டுனரை ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டாலின் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருவொற்றியூர் பகுதியில் பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருகின்றது. அதற்கு 8 டன் சிமெண்ட் கலவை கலந்து எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் போய் சேர்வதற்காக அதிவேகமாக சென்றுள்ளது. இதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியது என்பது தெரியவந்தது. இதனால் மணலி விரைவு ரோட்டில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.