லாரி மீது கார் மோதிய விபத்தில் பஞ்சு வியாபாரி பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி ஒன்று கோவையிலிருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது டேங்கர் லாரியின் பின்னால் பல்லடம் லட்சுமி மில் பகுதியில் வசிக்கும் வியாபாரியான சந்தான கிருஷ்ணன் என்பவர் காரில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் சந்தானகிருஷ்ணன் ஓட்டி வந்த கார் டேங்கர் லாரியின் பின்னால் பயங்கரமாக மோதியது.
அப்போது காருக்கு பின்னால் வந்த சரக்கு வேன் ஒன்று சந்தானகிருஷ்ணன் காரின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சந்தானகிருஷ்ணனின் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியிருந்த சந்தானகிருஷ்ணனை உடனடியாக மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.