கோவையை சேர்ந்த சுவாதி ஸ்ரீ என்ற மாணவி மாநில அளவில் யு.பி.எஸ்.சி தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2021 ஆம் வருடம் ஜனவரி மாதம் யு.பி.எஸ்.சி எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இதை தொடர்ந்து நேர்முகத்தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில் கோவை மாவட்டம் துடியலூர் அருகே தொப்பம்பட்டி பகுதியில் வசித்த மாணவி சுவாதி ஸ்ரீ அகில இந்திய அளவில் 42-வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவருடைய தந்தை தியாகராஜன் தொழிலதிபராக இருக்கின்றார். இவருடைய தாயார் லட்சுமி ஓய்வுபெற்ற அஞ்சல் ஊழியர்.தங்கை பி.டெக் படிக்கிறார். சுவாதி ஸ்ரீ குன்னூரில் பள்ளிப் படிப்பை படித்து முடித்துள்ளார்.
அதன்பின் தஞ்சாவூர் தனியார் கல்லூரியில் வேளாண்மை பட்டப்படிப்பை முடித்துவிட்டு கடந்த 2018 ஆம் வருடம் முதல் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராகி வருகின்றார். இவர் தனது மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது தேர்வின்போது வெற்றி பெற்று ஐ.ஆர்.எஸ் பணி கிடைத்துள்ளது. ஆனாலும் விடாமுயற்சியுடன் இந்த வருடம் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். மாணவிக்கு அவருடைய பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர் பேசியதாவது, ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்பது என்னுடைய இலட்சியம். இதற்காக ஏற்கனவே இரண்டு முறை தேர்வு எழுதி உள்ளேன். இரண்டாவது முறை தேர்வு எழுதிய போது ஐ.ஆர்.எஸ் துறை கிடைத்துள்ளது. ஆனாலும் ஐ.ஏ.எஸ் ஆகவேண்டும் என்ற லட்சியத்துடன் கடும் முயற்சி எடுத்து படித்து வந்துள்ளேன். மூன்றாவது முறை தேர்வு எழுதிய போது தற்சமயம் மாநில அளவில் முதலிடம் கிடைத்துள்ளது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் வேளாண்மை படித்துள்ளேன். ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பொறுப்பேற்றதும் விவசாயிகளுக்கு உதவி செய்வேன். எனது வெற்றிக்கு உதவிய ஆசிரியர், நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன் என்று கூறினார்.