மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் விவசாயி பலியான நிலையில், 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வி.களத்தூர் மேற்குத் தெருவில் விவசாயியான வெங்கடேசன்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேசன் தனது மனைவி சுந்தரம்மாளுடன்(40) மோட்டார் சைக்கிளில் கீழப்புலியூரில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் தம்பை பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது நிஷாந்த் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் வெங்கடேசனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த வெங்கடேசன், சுந்தரம்மாள், நிஷாந்த் ஆகிய 3 பேரையும் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த சுந்தரம்மாள் மற்றும் நிஷாந்த் கியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.