தர்மபுரியில் மனைவியின் கையை பிடித்து இழுத்த விவசாயியை கணவன் தலையில் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். 45 வயது ஆன நிலையில் இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ரமேஷ் என்பவர் குமாரிடம் ரூபாய் 48,000 தொகையை குடும்ப செலவிற்காக கடனாகப் பெற்றிருந்தார். இந்த கடன் தொகையை கடந்த வாரமே ரமேஷ் குமாரிடம் செலுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்று கூறி ரமேஷுடன் தகராறில் ஈடுபட்டார் குமார். இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன் பணத்தை திருப்பித் தந்து விட்டு வாகனத்தை எடுத்துச் செல் என்று கூறி ரமேஷின் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றுவிட்டார் குமார். அப்போது பொறுமை காத்த ரமேஷ் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறிவிட நேற்றையதினம் வீட்டிற்கு வந்து பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு மனைவியை கூட்டி செல் என்று கூறிய அவரது கையை பிடித்து இழுத்து மானபங்கம் படுத்தியுள்ளார்.
ஆத்திரமடைந்த ரமேஷ் இரும்பு கம்பியால் விவசாயி குமார் தலையில் பலமாக அடித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் அவர் இறந்ததை அறிந்ததும் ரமேஷ் காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததைக் கூறி சரணடைந்தார். தற்போது இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.