உலக சுகாதார மையமானது குரங்கு காய்ச்சல், சமூக பரவலாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது என்று எச்சரித்துள்ளது.
கனடா, அமெரிக்கா, போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஜப்பான், மற்றும் இங்கிலாந்து உட்பட சுமார் 20 நாடுகளில் 200 நபர்களுக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. இந்த குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் இருபாலின சேர்க்கையாளர்களுக்கும் தான் அதிகமாக ஏற்படுகிறது என்று ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.
இதுபற்றி உலக சுகாதார மையத்தின், உலக தொற்று அபாயம் நிலைக்குழுவினுடைய இயக்குனரான சில்வி பிரையன்ட் என்பவர் தெரிவித்ததாவது, இந்த குரங்கு அம்மை பாதிப்பு மக்கள் வருத்தப்படும் அளவிற்கு வேகமாக பரவக்கூடியது அல்ல. எனினும் படிப்படியாக இது சமூக பரவலாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.
இதை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தடுப்பூசி மற்றும் தகுந்த சிகிச்சை தான் இதற்கான தீர்வு. பாதிப்படைந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துவதன் மூலமாக இதனை தடுக்கலாம். வருங்காலத்தில் இந்த குரங்கு காய்ச்சல் மேலும் அதிகமானோரை தாக்கும் என்று கூறியிருக்கிறார்கள்.