15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வியாபாரியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள சொக்கநாதன்பட்டி கிராமத்தில் ஜெயபால்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடு வியாபாரம் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு வியாபாரம் தொடர்பாக ஆழ்வார்குறிச்சியில் வசிக்கும் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நண்பர்கள் ஆயினர். இந்நிலையில் ஆழ்வார்குறிச்சியில் இருக்கும் நண்பரின் வீட்டிற்கு சென்ற ஜெயபால் அவரது 15 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அந்த சிறுமி தனது உடையில் தீ வைத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சிறுமியை மீட்டு அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜெயபாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.