தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிறகு இரண்டு வருடங்கள் கழித்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. இதையடுத்து பொதுத்தேர்வு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு,தற்போது அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜூன் 13ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. அதில் முதல்கட்டமாக 21 மாநகராட்சிகளில் உள்ள அரசு பள்ளிகளில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் இந்த திட்டத்தை செயல்படுத்துவது கடினம்.
எவ்வித குறைபாடுகளும் இல்லாமல் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த கால அவகாசம் வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதன்படி இந்த திட்டம் தொடங்கிய பின்னர் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு 8.30 மணிக்கு வழங்கப்படும் என்றும் மாணவர்கள் உண்பதற்கு 30 நிமிடங்கள் வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பள்ளி மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.