கல்லூரி மாணவியை காரில் கடத்தி சென்று தாலிகட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்துள்ள திங்களூர் அருகில் சிங்காநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி. இவருக்கு 19 வயதுடைய மகள் உள்ளார். இவர் ஈரோட்டில் இருக்கின்ற ஒரு கல்லூரியில் பி. காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல கல்லூரிக்கு சென்ற மாணவி வீட்டிற்கு வருவதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது நிச்சாம்பாளையம் காலனியில் வசித்த 32 வயதுடைய தேவராஜ், 24 வயதுடைய தமிழரசன், நிச்சாம்பாளையம் ராஜன் நகரில் வசித்த 35 வயதுடைய ராஜி என்ற சஞ்சான் ஆகிய மூன்று பேரும் காரில் அங்கு வந்தார்கள்.
அதன்பின் அந்த மூன்று பேரும் இறங்கி மாணவியை வலுக்கட்டாயப்படுத்தி காரில் ஏற்றி கடத்தி சென்று விட்டார்கள். மாணவி காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டார். ஆனால் கார் அதிவேகமாக சென்றுவிட்டது. உடனே பேருந்து நிறுத்தத்தில் இருந்த பொதுமக்கள் சிலர் இதை பார்த்து திங்களூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். இந்நிலையில் காரில் இருக்கும்போதே தேவராஜ் மாணவியின் கழுத்தில் தாலி கட்டினார். உடனே அந்த மாணவி தாலியை கழற்றி வெளியே வீசி விட்டார்.இதற்கிடையில் தகவல் அறிந்த காவல்துறையினர் அனைத்து பகுதி காவல் துறையினருக்கு தகவல் அளித்தார்கள்.
இந்நிலையில் கவுந்தப்பாடி – திங்களூர் சாலையில் நிச்சாம்பாளையம் அண்ணா நகர் அருகே மாணவி கடத்தி சென்ற காரை காவல்துறையினர் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தார்கள். அதன்பின் மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டார்கள். இதனை அடுத்து மாணவியை கடத்திய 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் தேவராஜிக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதும், அவருடைய மனைவி இறந்துவிட்ட நிலையில் கடத்தப்பட்ட மாணவி ஒரு தலை காதல் கொண்டு அவர் கடத்திச் சென்றதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.