டெல்லியில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருகின்றது. முன் இல்லாத அளவிற்கு வெப்ப அலை வீசி வருவதால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். டெல்லியில் அதிகபட்சமாக 49 டிகிரி செல்சியஸை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தநிலையில் இன்று காலை டெல்லியில் பலத்த காற்றுடன் கன மழை கொட்டித் தீர்த்தது.
இதனால் வெப்பத்தின் தாக்கத்தில் தவித்த மக்களுக்கு சற்று நிம்மதி கிடைத்துள்ளது. இன்று காலை வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸில் இருந்து 29 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை நிலவினாலும் மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது. மேலும் நகரின் பிரதான சாலைகளில் தண்ணீர் ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி இருக்கின்றன.
கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு உள்ளதால் உரிய நேரத்திற்கு அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்து இருக்கின்றது. மழை தொடர்பான சம்பவங்களில் 8 பேர் காயமடைந்ததாக டெல்லி அரசு தெரிவித்திருக்கிறது.