பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள பூந்தமல்லியில் இருக்கும் காவலர் குடியிருப்பில் பாபுஜி- பானுமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் பாபுஜி பூந்தமல்லி போக்குவரத்து போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இதே குடியிருப்பில் பூந்தமல்லி காவல் நிலையத்தில் பெண் போலீசாக வேலை பார்க்கும் அமுதா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் குடியிருப்பின் அருகே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பானுமதி கீழே தண்ணீர் ஊற்றுயதால் வழுக்கி விழுந்து ஒரு சிறுவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அமுதா தட்டி கேட்ட போது அவருக்கும் பானுமதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த பானுமதி அமுதாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அமுதா தனது வீட்டில் உள்ள பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.