பைக்கின் மீது லாரி மோதிய விபத்தில் தச்சுத் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் இளங்கோவன் என்பவருடைய மகன் ராஜா(38).இவருடைய சொந்தக்காரர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கல்லவேப்பூரில் வசித்து வந்தவர் கோபால் என்பவருடைய மகன் கோபி(31). இவர்கள் 2 பேரும் தச்சு தொழிலாளர்கள். இவர்கள் திட்டக்குடி அடுத்துள்ள ஆவடி கூட்டு சாலையில் இருக்கின்ற மரப்பட்டறையில் வேலை பார்த்து வந்துள்ளார்கள். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மதியம் ராஜாவும், கோபியும் பைக்கில் வீட்டிற்கு சாப்பிட சென்றார்கள். பைக்கை ராஜா ஓட்டி சென்றார். அப்போது திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆவடி கூட்டு சாலையில் செல்லும் போது பின்னால் வந்த லாரி இவர்களின் பைக் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் ராஜாவும், கோபியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்கள். இதற்கிடையில் லாரி ஓட்டுநர் லாரியை ரோட்டிலேயே நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரும் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் லாரியை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து ராமநாத்தம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.