வீட்டின் சுவர் இடிந்து விழுந்து வாலிபர் காயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளிக்கவுண்டன் வலசு பகுதியில் பருவதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாற்றுத்திறனாளியான தனபால் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பருவதம் தனது மகன் தனபால், சகோதரி கண்ணம்மாள் ஆகியோருடன் சேர்ந்து மண் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. அப்போது திடீரென பருவதத்தின் வீட்டு சுவர் பின்புறமாக இடிந்து விழுந்துள்ளது.
இதில் அதிர்ஷ்டவசமாக பருவதம், தனபால், கண்ணம்மாள் ஆகிய 3 பேரும் உயிர் தப்பியுள்ளனர். இந்த விபத்தில் சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான 4 மோட்டார் சைக்கிள்கள், 3 சைக்கிள் உள்ளிட்ட 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. இந்நிலையில் சேதம் அடைந்த பொருட்களை மீட்க வந்த பிரகாஷ் என்பவர் மீது சுவர் விழுந்தது. இதில் காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.