ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆயர்பாடி பகுதியில் சதீஷ்(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓச்சேரி பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். கடந்த 15-ஆம் தேதி சதீஷின் நண்பர் ஒருவரின் ஆட்டோ பழுதாகி நின்றது. அந்த ஆட்டோவை எடுப்பதற்காக சதீஷ் தனது ஆட்டோவில் கரிவெடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சதீஷின் நண்பர்களான முத்து, ஹரி, சூர்யா ஆகிய மூன்று பேரும் உடன் சென்றனர். இந்நிலையில் சாலையில் இருந்த கல் மீது ஆட்டோ ஏறியதால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சதீஷ், முத்து, ஹரி ஆகிய 3 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். ஆனால் சூர்யாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக சூர்யாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சூர்யா பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.