மண்ணுக்குள் புதைந்த கோவிலை திருப்பணி ஆலோசனைக்குழு மீட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மேலப்பார்த்திபனூர் கிராமத்தில் கி.பி 13-ஆம் நூற்றாண்டை சேர்ந்த பட்டீஸ்வரம் முடைய அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மண்ணுக்குள் புதைந்து மேற்கூரை பகுதி மட்டும் தரை மட்டத்தில் உள்ளது. இந்த கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து மாநில திருப்பணிகள் ஆலோசனை குழு கோவிலை புனரமைக்க உத்தரவிட்டது.
அந்த உத்தரவின்படி நேற்று தோண்டும் பணி தொடங்கப்பட்டது. இந்நிலையில் இயந்திரம் மூலம் சுமார் 8 அடி வரை தோண்டி மண்ணுக்குள் புதைந்து இருந்த கோவில் வெளியே கொண்டு வந்தனர். இந்த கோவிலின் மூலஸ்தானத்தில் பட்டீஸ்வரம் முடைய அய்யனாரும், வெளி பிரகாரத்தில் நந்தி சிலை, உள்பிரகாரத்தில் விநாயகர், வராகி அம்மன் போன்ற சிலைகள் உள்ளது. இதுகுறித்து கோவில் பூசாரி மனோகரன் கூறியதாவது. இந்த கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு பழமையானது. கோவிலுக்கு சொந்தமாக அதிக அளவில் நிலங்கள் இருந்தது. ஆனால் பலர் ஆக்கிரமித்து தற்போது 1.6 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. இந்நிலையில் கோவிலில் தினமும் ஒரு கால பூஜை நடைபெறுகிறது என அவர் கூறியுள்ளார்.