கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், பாம்பன் ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக சூறாவளி காற்றுடன் கடல் சீற்றமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்றும் 3-வது நாளாக பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் சீற்றம் காணப்பட்டது. இதனையடுத்து மும்பையில் இருந்து சென்னை எண்ணூர் துறைமுகம் செல்ல வந்த மிதவைக் கப்பல் 6-வது நாளாக தென் கடல் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏராளமான நாட்டு படகு மற்றும் பைபர் படகுகள் கடல் உள்வாங்கியதால் கடற்கரை பகுதிகளில் தரைதட்டி நின்றது. இது குறித்து மீனவர்கள் கூறியதாவது. இந்த காற்று சீசனில் கடல் உள் வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் இயல்பான ஒன்றுதான். இதனால் எந்த ஒரு பயமும் இல்லை. மேலும் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நாட்டுப் படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என கூறியுள்ளனர்.