சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்றவாறு பெட்ரோல், டீசல் விலையானது தினசரி மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று விமான எரிபொருள் விலையானது மாதந்தோறும் முதல் தேதி மற்றும் 16ஆம் தேதி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையினால் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதால் சர்வதேச அளவில் எரிபொருள் விலை அதிகரித்து வருகிறது. இந்தியா கச்சா எண்ணெய் தேவையில் 85% இறக்குமதியையே நம்பி இருக்கிறது. பெட்ரோல், டீசல் போன்றவை சென்ற மார்ச் மாதம் 22ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 6ம் தேதி வரையுள்ள இடைப்பட்ட காலத்தில் ரூபாய் 10 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்பின் விலையில் மாற்றம் செய்யப்படாமல் ஒரே விலையில் நீடித்து வருகிறது. அதே சமயத்தில் விமான எரிபொருள் விலையானது சென்ற மார்ச் மாதம் 16ஆம் தேதி கிலோ லிட்டருக்கு 18 % அதாவது ரூபாய் 17,135.63 அதிகரிக்கப்பட்டது.
ஏப்ரல் 1ஆம் தேதி 2 சதவீதமும், 16ம் தேதி 0.2 சதவீதமும், மே 1ம் தேதி 3.2 சதவீதமும் உயர்த்தப்பட்டது. இதற்கிடையில் நேற்று 5.3 % உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று 1 கிலோ லிட்டர் விமான எரிபொருள் ரூபாய் 6,188.25 அதிகரித்து ரூ.1,23,039.71-க்கு விற்பனையாகியது. அதேபோல் மும்பையில் ரூபாய் 1,21,847.11க்கும், கொல்கத்தாவில் ரூபாய் 1,27,854.60க்கும், சென்னையில் ரூபாய் 1,27, 286.13க்கும் விற்கப்படுகிறது. உள்ளூர் வரி மாறுபடுவதன் காரணமாக இதன் விலையானது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டு உள்ளது. விமான எரிப்பொருள் விலை சென்ற மார்ச் மாதம் முதலே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று இதுவரையிலும் இல்லாத அளவில் 5.3 % உயர்ந்துள்ளது. இந்த வருடத்தில் தொடர்ந்து 10வது முறையாக விமான எரிபொருள் விலையானது உயர்த்தப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகளவில் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் விமான கட்டணமும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.