தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் தக்காளி உற்பத்தி சீசன் இல்லாத காரணத்தால் சந்தைக்கு தினம்தோறும் 500 முதல் 700 தக்காளி பெட்டிகள் வருகிறது.
அந்த வரத்து தற்போது குறைந்துள்ளதால் தக்காளியின் விலை படிப்படியாக உயர்ந்து 14 கிலோ கொண்ட ஒரு தக்காளி பெட்டி 1,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தக்காளி விலை உயர்வு இன்னும் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு இருக்கும் என்று வியாபாரிகளும் விவசாயிகளும் தெரிவித்துள்ளனர். அதனால் இனி வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் உயரலாம் என்றும் கூறப்படுகிறது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.