ராஜபக்சேவின் இலங்கை பொது ஜன பெரமுன கட்சி, ரணில் விக்ரமசிங்கேக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது. இந்த நிலையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியிலிருந்து கடந்த 9 ஆம் தேதி விலகியுள்ளார். மேலும் அவருடைய ஆதரவாளர்களின் தாக்குதலுக்கு பதிலடியாக கலவரம் வெடித்துள்ளது. கடந்த 12ஆம் தேதி புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் இடைக்கால அரசில் இணையுமாறு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால் அவரது அழைப்பை எதிர்க்கட்சிகள் நிராகரித்துள்ளனர். அதேசமயம் ராஜபக்சேவின் இலங்கை பொது ஜன பெரமுன கட்சி, ரணில் விக்ரமசிங்கேக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் இடைக்கால அரசில் இடம் பெறாவிட்டாலும் இலங்கையை மீட்பதற்கான விக்ரமின் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளனர். இந்த நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி கடந்த மாதம் 9ஆம் தேதியிலிருந்து காலிமுகத்திடலில் போராட்டத்தை நடத்திவரும் போராட்டக்காரர்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாரும் எதிர்பாராத வகையில் ஆதரவு தெரிவித்திருக்கின்றார்.
பிபிசி சிங்கள சேவைக்கு அளித்துள்ள பேட்டியில் ரணில் விக்ரமசிங்கே கூறியபோது, இலங்கை அரசியல் முறையில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு இந்த போராட்டம் நீடிக்க வேண்டும். மேலும் நாட்டை தலைமை தாங்கி நடத்தும் பொறுப்பை அந்த இளைஞர்கள் ஏற்றுக்கொள்ளட்டும். அவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவர்களின் கருத்துக்கள் என்ன என்பது குறித்து கேட்கப்படும். அவர்களது நலன்களை ஆய்வு செய்வதற்கு ஒரு கமிட்டியை நான் ஏற்பாடு செய்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே புத்தர் பிறந்த நாளான புத்தபூர்ணிமா, “வேசக் போயோ” தினமாக நேற்று கொண்டாடப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒரு வாழ்த்து செய்தியை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தற்போதைய சூழ்நிலையை நாம் மனதில் வைத்து செயல்பட வேண்டும். கடினமான சூழ்நிலையில் நெகிழ்வுத் தன்மையுடன் இயங்குவது மிகவும் அவசியமாகும். நாடு சிக்கலான நிலைமையில் இருக்கும் நேரத்தில் இதற்கு தீர்வு காண அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் உடனடியாக இணைந்து செயல்பட வேண்டும். மேலும் முதன்மையான இலக்கை விட்டு விலகாமல் தாம் விரும்பிய நோக்கத்தை எட்டுவதே நமது உண்மையான இலக்காக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சுய கட்டுப்பாடும்,ஸ்திரத்தன்மையும் மறுபடியும் நிலைநிறுத்தப்பட வேண்டும். மேலும் மக்களின் வாழ்க்கை முறையை மீட்டு கொண்டுவர உறுதி எடுத்துக் கொள்வது புத்தருக்கு செய்யும் தொண்டு என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இந்திய தூதரகம் போன்றோரும் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றனர்.