சென்னையில் உள்ள நீலாங்கரை பகுதியில் செண்பகம் என்ற மூதாட்டி வசித்துவருகிறார். இவரின் மூத்த மகன் பாபு மற்றும் இளைய மகன் சுரேஷ் ஆவர். பாபுவிற்கு திருமணமாகி தனது குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். இளைய மகனுக்கு திருமணமாகி கெல்சி என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். அதனைத் தொடர்ந்து மூதாட்டி செண்பகம் தனது இளைய மகன் சுரேஷுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட சுரேஷ் தனது மனைவி, பிள்ளைகளுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கடந்த 8ஆம் தேதி மனைவி கெல்சி தனது பிள்ளைகளுடன் பெருங்குடியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து செண்பகமும் சுரேசும் வீட்டில் தனியாக இருந்து வந்தனர்.
இந்நிலையில் தாய் செண்பகத்தை பார்க்க மூத்த மகன் பாபு இன்று காலை தாயை பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சுரேஷ் தனது அண்ணன் பாபுவை வீட்டில் நுழைய விடாமல் தடுத்து தகராறு செய்துள்ளார். மேலும் தாயைப் பற்றி விசாரித்தபோது சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த பாபு தனது தாய் குறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது அவர்கள், கடந்த சில நாட்களாக செண்பகத்தை பார்க்கவில்லை என்றும் இது குறித்து சுரேஷிடம் கேட்டதற்கு சரியான பதில் அளிக்கவில்லை என்று அவர்கள் கூறினர். உடனே பாபு நீலாங்கரை போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுரேஷிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், சுரேஷ் தனது தாய் செண்பகம் சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். எனவே அவரின் உடலை வீட்டிலிருந்த டிரம்மில் போட்டு சிமெண்டால் பூசி அடக்கம் செய்து விட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் டிரம்மில் உள்ள மூதாட்டியின் உடலை எடுக்க முயன்றனர். ஆனால் உடலை எடுக்க முடியாததால் டிரம்புடன் உடற்கூறு பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சுரேஷிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.