இருதரப்பினர் மோதலில் ஈடுபட்டதால் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டதோடு, 2 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள காந்தி நகர் காலனி பகுதியில் இருக்கும் மைதானத்தில் செட்டிநாயக்கன்பட்டி யை சேர்ந்த வாலிபர்கள் நேற்று இரவு அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்கும் காந்திநகர் காலனியை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த காந்திநகர் காலனியை சேர்ந்த சில வாலிபர்கள் தகராறு செய்து கொண்டிருந்தவர்களை விலகி விட்டனர். அப்போது செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த வாலிபர்கள் இதை கேட்க நீங்கள் யார் என கேட்டு மீண்டும் தகராறு செய்தனர். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.
இதில் கோபமடைந்த செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த வாலிபர்கள் அங்கிருந்த 2 கடைகளை அடித்து நொறுக்கியுள்ளனர். இதேபோல் காந்திநகர் காலனியைச் சேர்ந்த வாலிபர்கள் செட்டிநாயக்கன்பட்டி வாலிபர்களுக்கு சொந்தமான இரண்டு மோட்டார் சைக்கிளை தீவைத்து எரித்தனர். இதுகுறித்து இருதரப்பினர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த இரண்டு பகுதிகளிலும் பதற்றம் நிலவுவதால் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.