போலீஸ் போல நடித்து வாகன சோதனையில் ஈடுபட்டு லாரி டிரைவரிடம் பணத்தை பறித்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மதுரவாயலில் வசித்த 45 வயதுடைய நாகராஜன் என்பவர் கேரளா மாநிலம் திருச்சூரிலிருந்து ஒரிசா மாநிலத்திற்கு சோலார் பேனல் ஏற்றுக்கொண்டு லாரியை ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த லாரி நேற்று அதிகாலை 1 மணி அளவில் மதுக்கரை அருகில் எல் அண்டு டி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது ரோட்டின் ஓரம் லாரியை நிறுத்திவிட்டு நாகராஜன் டீ குடிக்க சென்றுவிட்டார்.
அப்போது அங்கு வந்த 4 பேர் நாகராஜனிடம் நாங்கள் குற்றப்பிரிவு போலீஸ் என்று கூறி உன் மீது சந்தேகம் இருக்கிறது எங்கிருந்து வருகின்றாய் என்று கேட்டனர். உனது லாரி சரக்கு குறித்த விபரம் அனைத்து ஆவணங்களையும் கொண்டு வா என்று தெரிவித்தனர். உடனே நாகராஜ் ஆவணங்களை எடுத்து அவர்களிடம் காண்பித்தார். அதற்கு அவர்கள் போலியான ஆவணங்கள் என்று கூறி வழக்கு போட போகிறோம். அதற்கு பணம் கொடுத்தால் வழக்கு போட மாட்டோம் என்று தெரிவித்தார்கள்.
அதற்கு நாகராஜன் பணம் இல்லை என்று தெரிவித்ததால் 4 பேரும் அவரை தாக்கி அவரிடமிருந்த 1,100 ரூபாயை பறித்து விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடினார். இதனால் சந்தேகம் அடைந்த நாகராஜன் இதுகுறித்து மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அப்பொழுதுதான் அவர்கள் போலீஸ் போன்று நடித்தார்கள் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து மதுக்கரை காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த 4 பேரையும் பிடிப்பதற்கு இன்ஸ்பெக்டர் வைரம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் குப்புராஜ் மற்றும் காவல்துறையினர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டன.
மேலும் அந்த நான்கு பேரையும் காவல்துறையினர் தேடி வந்த நிலையில் மதுக்கரை மார்க்கெட் பகுதியில் சந்தேகப்படும்படி மூன்று நபர்கள் சுற்றி வந்தனர். உடனே தனிப்படை காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் ஆத்துப்பாலம் பகுதியில் வசித்த 43 வயதுடைய முகம்மது அலி, 40 வயதுடைய பாஷா, 36 வயதுடைய சம்சுதீன் என்பதும், போலீஸ் போல நடித்து பணத்தை பறித்து சென்றதும் இவர்கள் தான் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அசார் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.