அரசு பேருந்து ஓட்டுநர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சாத்தூரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள படந்தால் சந்திப்பு சாலையில் போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது செந்தில்குமார் என்பவர் சாத்தூரிலிருந்து சிவகாசி நோக்கி செல்லும் அரசு பேருந்தை ஓட்டி வந்துள்ளார். அப்போது போக்குவரத்து காவல்துறையினர் அரசு பேருந்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர். ஆனால் செந்தில்குமார் ஒலி ஒலித்தபடி பேருந்தை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நான்கு வழிச்சாலையின் நடுவே பேருந்தை நிறுத்தி கீழே இறங்கிய ஓட்டுநர், போக்குவரத்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பிற வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் பேருந்தை உடனடியாக எடுத்துச் செல்லும்படி அறிவுறுத்தினர். இதனையடுத்து ஓட்டுனர் அரசு பேருந்தை அங்கிருந்து ஓட்டிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.